மறக்க முடியுமா? 2

நான் விமர்சனம் எழுதிய முதல் திரைப்படம்

-சித்ரா லட்சுமணன்

தெள்ளூர் தருமராசனின் கடையில் பம்புசெட்டை கடனில் வாங்கிய பல விவசாயிகளிடம் அந்தக் கடனை வசூலிப்பதற்காக நானும் அவரும் சைக்கிளில் போவது வழக்கம். அப்படி பல நாட்கள் பயணம் செய்ததில்  அவரோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட து. விரைவில் சென்னைக்கு சென்று பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச்  சொன்ன அவர் சென்னைக்கு சென்றபோது என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

அப்போது கதாசிரியர் மா.ரா அவர்கள் ஜெய்சங்கர்-கே.ஆர்.விஜயா ஜோடியாக நடிக்க தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரான கே எஸ் சேதுமாதவன் இயக்கத்திலே பால்மனம் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பால்மனம் படத்திலும்  பாடல்கள் எழுத தருமராசனுக்கு வாய்ப்பு தந்திருந்தார் மா.ரா.  அந்தப் பாடல்களுக்கு   இசையமைத்தவர் பார்த்தசாரதி.இவர்தான் எண்பதுகளின் இறுதியில் எக்கோ என்ற இசை நிறுவனத்தின் மூலம் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தையும் வெளியிட்டவர். 

மா.ரா.அவர்களின்  அலுவலகம் அப்போது தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை அருகே அமைந்திருந்தது.அங்கே என்னை அழைத்துச் சென்று மா.ரா.அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் தருமராசன்.
பின்னர் நான்கு நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு தெள்ளூர் தருமராசன் ஆரணிக்கு புறப்பட்ட போது   பிறகு வருவதாக அவரிடம் கூறிவிட்டு  நான் என்னுடைய சகோதரியின் வீட்டில்  தங்கி விட்டேன். அப்போது என்னுடைய மூத்த சகோதரியான வசந்தா சென்னையில் மேற்கு மாம்பலத்திலுள்ள ஏரிக்கரை சாலையில் குடி இருந்தார்.

அது 1967 பொதுத் தேர்தல் நேரம்.  திமுக நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக பங்கு பெற்றவன் என்ற காரணத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எனக்கு அப்போது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது.ஆகவே  மேற்கு மாம்பலம் முழுவதும்  உள்ள சாலைகளிலும்  சுவர்களிலும் VOTE FOR DMK என்று எழுதினேன். அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்து ஆட்சி அமைத்தது .

தேர்தல் முடிந்த அடுத்த மாதம் சென்னை வந்த தருமராசன் பத்திரிக்கை நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டதாகவும் பத்திரிகையின் பெயர் விடிவெள்ளி என்றும் எனக்கு தெரிவித்தார்.பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை தெள்ளூர் மு.தருமராசன் ஏற்றுக்கொள்ள எனக்கு நிர்வாகி, சினிமா நிருபர், உதவி ஆசிரியர், பிழை திருத்துபவர் என்று அந்த பத்திரிகையில்  பல வேலைகள்.
உதவி ஆசிரியராவதற்கு அப்போது எனக்கு இருந்த  ஒரே தகுதி என்னெவென்றால் ஆரணியில் இருந்தபோது  நான் எழுதிய ”ஒரே ஒரு பைசா” என்ற கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளிவந்து இருந்தது மட்டுமே.

விடிவெள்ளி  பத்திரிகையில்    பரபரப்பான அரசியல் கட்டுரைகளை விவேகானந்தன் எழுதினார். தருமராசன் அடிப்படையில் காங்கிரஸ்காரர் என்பதால் விடிவெள்ளி அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை கடுமையாக விமர்சிக்கின்ற காங்கிரஸ் கட்சியின்  பத்திரிகையாக  வெளிவந்தது. 

என் வாழ்க்கையில் எப்படிப்பட்ட முரண் பாருங்கள். 1967ஆம் அண்டு பிப்ரவரி வரை திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரித்து சுவர் சுவராக விளம்பர வாசகங்கள் எழுதிய நான் அடுத்த இரண்டாவது  மாதத்தில் கூசாமல் திமுகவை வசை பாடிய காங்கிரஸ் பத்திரிகையில் உதவி ஆசிரியர். விடிவெள்ளி பத்திரிகையின் சினிமா பகுதியையும் நான்தான் பார்த்துக் கொண்டேன் என்பதால் திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதும் வேலையும் என்னிடம் வந்து சேர்ந்தது.

ஒரு பத்திரிகையாளனாக நான் பத்திரிகையாளர் காட்சிக்கு போய் படம் பார்த்து விமர்சனம் எழுதிய படம் முத்துராமன் ராஜஸ்ரீ ஜோடியாக நடிக்க சி.வி. ராஜேந்திரன் இயக்கத்திலே வெளிவந்த அனுபவம் புதுமை. அது வரை இயக்குனர் ஸ்ரீதரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய அவரது உறவினரான சி.வி ராஜேந்திரனுக்கு இயக்குனராக அதுதான் முதல் படம். அன்று எனக்கு அறிமுகமான அவர் இன்று வரை என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கிறார். நான் தயாரித்த இரண்டாவது படமான வாழ்க்கை திரைப்படத்தை இயக்கியவரும் அவர்தான்.

விடிவெள்ளி பத்திரிக்கையில் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான முதல் நடிகர் அது ஏவி.எம் ராஜன். பழகுவதற்கு ஏவி.எம்.ராஜன் அவர்களைப் போல ஓரு இனிய நண்பரைப் பார்ப்பது மிக அரிது. அப்போது விடிவெள்ளி மிகப் பெரிய பத்திரிக்கை அல்ல.இருப்பினும் அந்த பத்திரிகைக்கும் அந்த பத்திரிகையின் பிரதிநிதியான எனக்கும் அவர் மிகுந்த மரியாதை கொடுத்தார். நான் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல் கலைஞரும் ஏவி எம் ராஜன் அவர்கள்தான். பின்னர் அவருக்கு பத்திரிகைத் தொடர்பாளராக நான் பணியாற்றிய போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை.  

ஏவி.எம்.ராஜன் 


விடிவெள்ளி பத்திரிகையில் எனக்கு அறிமுகமான ஒரு முக்கியமான நண்பர் ஓவியர் எல் ஜி. ராஜ். இப்போது பாக்கெட் நாவல் என்ற பெயரிலே பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கும்  அசோகனின் தந்தைதான் ராஜ். மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதிலும் ராஜ் அவர்களுக்கு நிகரான ஒரு நண்பரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஓவியர் எல்.ஜி.ராஜ் 


விடிவெள்ளி பத்திரிகையிலே பரபரப்பான அரசியல் கட்டுரைகளை  எழுதிக் கொண்டிருந்த விவேகானந்தன், மிகச் சிறந்த எழுத்தாளர். அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அவ்வளவு அருமையாக அனல் பறக்க எழுதுவார். விடிவெள்ளி பத்திரிகையின் விற்பனைக்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். தருமராசன் அவர்கள் அரசியல் கட்டுரைகள் தவிர விவசாயிகளின்  முன்னேற்றத்துக்கான பல கட்டுரைகளையும் பத்திரிகையில் எழுதி வந்தார்.அவரும் ஓரு விவசாயி என்பதால்  தான் நடத்தும் பத்திரிகை அவர்களுக்கும் பயன்படவேண்டும் என்று அவர் எண்ணினார்.

விடிவெள்ளி பத்திரிகை நல்ல விற்பனையில் இருந்தபோது “விவசாயிகள் முற்போக்கு இதழ்” என்ற அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் போட்டார் தருமராசன். ஒரு அரசியல் பத்திரிகையை  விவசாயிகள் முன்னேற்றப் பத்திரிக்கை என்று விளம்பரப்படுத்தினால் அந்த பத்திரிகை எப்படி விற்கும் என்று நான் எவ்வளவோ மன்றாடியும் அவர் கேட்கவில்லை.விளைவு?பத்திரிகையின் விற்பனை மளமளவென்று சரிந்தது.

பத்திரிகை விற்பனை சரிந்தவுடன் ஒரு சமயம் அவர் ஆரணிக்கு போயிருந்தபோது அவருக்கு சொல்லாமலே அந்த வாசகத்தை பத்திரிகையின் முன் பக்கத்திலிருந்து நான் நீக்கிவிட்டேன்.ஊரிலிருந்து திரும்பியதும் மிகக் கடுமையாக அவர்  என்னிடம் கோபித்துக் கொண்டாலும் அதில் ஒரு வார்த்தை கூட   கண்ணியக் குறைவாக இல்லை. அந்த அளவிற்கு பண்பான மனிதர் அவர்
திரும்பவும் அந்த வாசகங்கள் பத்திரிகையில்  சேர்க்கப் பட்டன. நான் எதிர்பார்த்தது போலவே பத்திரிகை விற்பனை சரிந்தது மட்டுமின்றி ஒரு நாள் அடியோடு நின்று போனது.

என்னென்னவோ கற்பனைகளுடன் அந்த பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் மிகுந்த ஏமாற்றத்தோடு பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஆரணிக்கு புறப்பட்டேன்.

சென்னையை விட்டு ஆரணிக்கு சென்றுவிட்ட நான்   மீண்டும் சென்னைக்கு வரக் காரணமாயிருந்தவர் யார்?

தொடரும் 

Comments

Popular posts from this blog