மறக்க முடியுமா? 4

என்னை பத்திரிகைத் தொடர்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர்

-சித்ரா லட்சுமணன்

நடிகை பாரதி பேட்டிக்காகத்  தயாராக இருந்த நிலையில் அவரைப் பேட்டி காண்பதற்காக ஜெயகாந்தனை அழைத்துச் செல்லச்  சென்றிருந்த என்னைப் பார்த்து “நான் எதற்கு அந்த நடிகையைப் பேட்டி காண வேண்டும்?அதனால் இந்த சமுதாயத்திற்கு என்ன பலன் ஏற்படப் போகிறது?”என்றெல்லாம் கேள்விகளை ஜெயகாந்தன் வரிசையாக அடுக்கியபோதே  அவருக்கு நான் என்ன பதில் சொன்னாலும் அன்றைய பேட்டி மட்டும் நடக்கப் போவதில்லை என்று  எனக்குத் தெளிவாகப் புரிந்தது.இருப்பினும் அதற்காக முயற்சி செய்யாமல் விட்டுவிட முடியுமா?.அதனால் ஏறக்குறைய அரை மணி நேரம் அவருடன்  போராடினேன். இறுதியாக அவர் வரவே மாட்டார்  என்று தெரிந்ததும் பாரதியை  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அன்றைய நிகழ்ச்சி ரத்து என்பதை சொல்லிவிட்டு, நாவலாசிரியர் யார் என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் அவருடன் தொடர்பு கொள்வதாகக் கூறினேன்.
அடுத்து அப்போது ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த எழுத்தாளர் தாமரை மணாளனை தொடர்பு கொண்டு அந்த பேட்டியைப் பற்றி  கூற அவர் பாரதியை பேட்டி காண சம்மதித்தார்.
தாமரை மணாளனுடன் நடந்த சந்திப்பில் நடிகை  பாரதி 

இந்த பத்திரிகைப் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோது தெள்ளூர் தருமராசன் தனது நண்பரான கதாசிரியர் மா.ரா.வுடன் சேர்ந்து அக்காவுக்குக் கல்யாணம் என்ற பெயரிலே ஒரு படம் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் . ஆகவே பத்திரிகை வேலைகள் முடிந்தவுடன் அப்போது டிரஸ்ட் புரத்திலிருந்த மா.ரா.வின் அலுவலகத்துக்கு சென்று விடுவதை நான்  வழக்கமாக வைத்திருந்தேன்.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில்  மா.ரா.அவர்களின் அலுவலகம் இருந்த அதே காம்பவுண்டில்தான் இயக்குனர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களது அலுவலகமும் அப்போது இருந்தது. தமிழ்ப் பட உலகின் முன்னோடியான ஒளிப்பதிவு மேதை கே.ராம்னாத்திடம் உதவியாளராக இருந்த ஜி.ராமகிருஷ்ணன் அப்போது ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த அன்று கண்ட முகம் , ஜெமினி கணேசன் –சரோஜாதேவி ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த ஐந்து லட்சம் ஆகிய படங்களை இயக்கிவிட்டு சிநேகிதி என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தார். சிநேகிதி படத்திற்கும் மா.ரா.தான் வசனம் என்பதால் இயக்குனர் ஜி ராமகிருஷ் ணன் அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார் மா.ரா.   அந்த ராமகிருஷ்ணன்தான் வெள்ளித் திரையில் என்னுடைய பெயர் முதன் முதலில் வரக்  காரணமாக அமையப்  போகிறார் என்று அப்போது நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஜி.ராமகிருஷ்ணன் 

இதற்கிடையில் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்த ஏவி எம் ராஜன் கேட்டுக் கொண்டதால் அவரது  பத்திரிகைத் தொடர்பு வேலைகளை நான் ஏற்றுக் கொண்டேன். அப்போது பத்திரிகையாளர்கள் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்ததால் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பைத் தந்தனர்.
இதற்கிடையில் இந்தியன் மூவி ஸ்டார் பத்திரிகையின் சார்பாக திரைப்படங்களின் பத்திரிகைக் காட்சிகளுக்கு சென்றபோது ஒரு பத்திரிகைத் தொடர்பாளர் என்னை சற்று அலட்சியமாக நடத்தியதால் காயம் அடைந்த எனக்குள் நாம் ஏன் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.அந்த எண்ணம் தோன்றியவுடன் மா.ரா.அவர்களை சந்தித்து அப்போது ஜி.ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்கவிருந்த சிநேகிதி படத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் வேலையை எனக்கு பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் ஜி ராமகிருஷ்ணனிடம் சொன்ன  உடனே எந்தத் தயக்கமும் இன்றி அந்த வேலையை என்னிடம் ஒப்படைத்தார் ஜி.ராமகிருஷ்ணன். அதற்கு முன் அந்தப் பணியில் எனக்கு எந்த அனுபவமும் இல்லையே என்பது பற்றி எல்லாம்  எந்த யோசனையும் இல்லாமல் அவர் அன்று அந்த சந்தர்ப்பத்தை எனக்கு  வழங்காமல் இருந்திருந்தால் இன்று இந்தத் தொடரை எழுதுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்காமலே கூட போயிருக்க வாய்ப்பிருக்கிறது 

சிநேகிதி படத்திலே இரண்டு கதாநாயகர்கள்.ஒரு கதாநாயகனாக ஜெமினி கணேசனை ஒப்பந்தம் செய்திருந்தார் ராமகிருஷ்ணன். சரோஜாதேவி கதாநாயகியாக நடித்த அந்தப் படத்திலே இருந்த  இன்னொரு கதாநாயகன் வாய்ப்பை தனக்குத்தான் தரவேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணனோடு ஏற்கனவே “அன்று  கண்ட முகம்”  படத்திலே பணியாற்றிய ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் ரவிச்சந்திரனின் மார்க்கெட்  மோசமாக  இருந்தது. 1968 ஆம் ஆண்டு அவர் நடித்த “சத்யம் தவறாதே, செல்வியின் செல்வன், டில்லி மாப்பிள்ளை, நிமிர்ந்து நில், நீயும் நானும் “ஆகிய படங்கள் தோல்வியடைந்திருந்ததால் 1969 ஆம் ஆண்டில் அவரும் சரோஜாதேவியும் ஜோடியாக நடித்து “ஓடும் நதி” என்று ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி இருந்தது. அந்தப் படமும் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்து விடவே அவருக்கு வாய்ப்பு தருவது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார் ராமகிருஷ்ணன்.

இதற்கிடையில் "ஜெமினி கணேசன் ஜோடியாக சரோஜாதேவி நடிக்கும் சிநேகிதி"  என்று பத்திரிகைகளில் செய்தியை வெளியிடச் சொன்ன இயக்குனர் ஜி.ராமகிருஷ்ணன்  இரண்டாவது கதாநாயகன் பற்றி அந்தச் செய்தியில் எதுவும் வெளியிட வேண்டாம் என்றார்.அவர் சொன்னபடி “ஜெமினி  கணேசன்-சரோஜா தேவி ஜோடியாக நடிக்கும் சிநேகிதி” என்று எல்லா பத்திரிகைகளுக்கும் செய்தியை அனுப்பி வைத்தேன். அந்த வெள்ளிக் கிழமை தினத்தந்தியின் சினிமா பகுதியில் கொட்டை எழுத்தில் "ஜெமினி கணேசன் –ரவிச்சந்திரன் நடிக்கும் சிநேகிதி" என்று செய்தி வெளியாகியிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.

அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு டைரக்டர் ஜி.ராமகிருஷ்ணன் நிச்சயம் சத்தம் போடுவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் முதல் முதலாக பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்ற தந்திருந்த வாய்ப்பையே பறித்து விட்டாரானால் என்ன செய்வது என்ற கலக்கத்துடனேயே அவரது அலுவலகத்துக்கு சென்றேன்.
நான் எதிர்பார்த்தது மாதிரியே என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “நான் என்ன நியூஸ் கொடுக்கச்  சொன்னேன்.நீங்க என்ன கொடுத்திருக்கீங்க?”என்று அவர் கோபம் கொப்பளிக்கக் கேட்டதும் “நீங்க சொன்ன மாதிரியேதான் நான் எல்லா பத்திரிகைகளுக்கும் செய்தி அனுப்பினேன். மற்ற பத்திரிகைகளில் சரியாக வந்திருக்கும் செய்தி தினத்தந்தியில் மட்டும் இப்படி வந்திருக்கிறது  என்றால் அதற்குக் காரணம் நான் இல்லை,ரவிச்சந்திரன். தினத்தந்தி பத்திரிகையின் சினிமா நிருபரான அதிவீரபாண்டியன் ரவிச்சந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால்  "நான் சிநேகிதி  படத்திலே நடிக்கேறேன்" என்று ரவிச்சந்திரன்தான்  அதிவீரபாண்டியனிடம் சொல்லி  அப்படி ஒரு செய்தியை தினத் தந்தியிலே போடச் சொல்லி  இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். நான் அப்படி சொன்னவுடன் ஏதோ பேசத் தொடங்கிய  ஜி.ராமகிருஷ்ணன் பேச்சை அப்படியே நிறுத்தியதும் அவர் பார்த்துக் கொண்டிருந்த  திசையை நான் பார்த்தேன்.

அங்கே ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தார் .

தொடரும் 



Comments

Popular posts from this blog