கங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயகங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயலலிதா சந்தித்த சோதனை
மறக்க முடியுமா? 6

கங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயலலிதா சந்தித்த சோதனை

-சித்ரா லட்சுமணன்

"சித்ரா என்ற பெயர் உங்கள் பெயரோடு  எப்படி இணைந்தது" என்பது என்னை பொது நிகழ்ச்சிகளில் பார்க்கின்ற பலர் கேட்கும் கேள்வி .பல திரை நட்சத்திரங்கள் கூட இந்தக் கேள்வியை என்னிடம் பல முறை கேட்டிருக்கிறார்கள். அந்த பெயருக்குப் பின்னே  ஏதோ ஒரு காதல் கதை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஆர்வமாக கேள்வி கேட்கின்ற அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "சித்ரா என்ற பெயரிலே எனக்கொரு காதலி இருந்தாள்.அவள் நினைவாகத்தான் அந்தப் பெயரை என் பெயரோடு இணைத்து வைத்துக் கொண்டேன்" என்று கூட பலரிடம் நான் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் அந்தப் பெயர் என் பெயரோடு இணைந்த கதையே வேறு, சித்ரா என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர் என்பதால்  என்னுடைய நியூஸ் ஏஜென்சிக்கு "சித்ரா பப்ளிசிட்டீஸ்" என்று பெயர் வைத்திருந்தேன்.அதற்குப் பிறகு என்னை "சித்ரா பப்ளிசிடீஸ் லட்சுமணன்" என்று அழைக்க ஆரம்பித்த பல நண்பர்கள்  பின்னர் "சித்ரா லட்சுமணன்" என்றும் "சித்ரா" என்றும் அழைக்க ஆரம்பித்தனர்.சித்ரா லட்சுமணன் என்ற பெயர்  மிகவும் வித்தியாசமான பெயராக இருக்கவே அந்தப் பெயரையே என் பாஸ்போர்ட் உட்பட எல்லா முக்கியமான ஆவணங்களுக்கும் பயன்படுத்தத் தொடங்கினேன்.பின்னர் அதுவே என் பெயராக நிலைத்தது.

முக்தா சீனிவாசனிடம் என்னைப்பற்றி கூறியிருப்பதாகவும்  அவரைச் சந்திக்கும்படியும் என்னிடம் ஒருநாள் கூறினார் இயக்குனர் ஜி.ராமகிருஷ்ணன். அப்போது முக்தா பிலிம்ஸ் அலுவலகம் மந்தைவெளிப்பக்கத்தில் இருந்தது. அங்கு சென்ற நான் முக்தா சீனிவாசன் அவர்களையும் அவரது சகோதரரான முக்தா ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினேன். சிவாஜி கணேசன்-கே.ஆர்.விஜயா ஜோடியாக நடிக்க அப்போது அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த "தவப்புதல்வன்" படத்துக்கு பத்திரிகைத் தொடர்பாளனாக நான் பணியாற்ற வேண்டும் என்று என்னிடம் சொன்ன முக்தா சீனிவாசன்  என்னுடைய சம்பளம் பற்றி எல்லாம் முக்தா ராமசாமி பேசுவார் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

முக்தா வி.சீனிவாசன் 


என் சம்பளம் எவ்வளவு என்றோ அல்லது அவர்கள்  படத்திலே பணியாற்ற நான் எவ்வளவு எதிர்பார்க்கிறேன் என்றோ எதையும் என்னிடம் கேட்காமல் "உங்களுக்கு இந்த படத்தில் ஐநூறு ரூபாய் சம்பளம்.முன்பணமாக ஐம்பது ரூபாயை மேனேஜர் நாயர் தருவார் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் முக்தா ராமசாமி.

முக்தா பிலிம்ஸ் நிறுவனத்திலே சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் அதை சரியாக கொடுத்துவிடுவார்கள் அது தவிரஅந்தச் சகோதரர்கள் இருவருமே  தங்களிடம் பணியாற்றுகின்றவர்களை மிகவும் மரியாதையோடு நடத்துவார்கள்.
ஒவ்வொரு மாதமும் அந்த மாதம் எடுக்கப்பட்ட காட்சிகளின்  புகைப்படங்கள் தயாரானதும் புகைப்படங்கள் தயாராக இருப்பதாகவும் அலுவலகத்துக்கு வந்து அந்த புகைப்படங்களை பெற்றுக் கொள்ளும்படியும் அவர்கள் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு கார்டு வரும்.அதன் பின்னர் அவர்கள் அலுவலகத்துக்கு சென்றால் பத்து அல்லது பதினைந்து புகைப்படங்களை என்னிடம் கொடுப்பார்கள். அடுத்த மாதம் புகைப்படங்களை வாங்கச்  செல்லும்போது முதல் மாதம் அவர்கள்  கொடுத்த புகைப்படங்கள் எந்தெந்த பத்திரிகையில் வந்தது என்று அந்த பத்திரிகைப் பிரதியோடு அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இத்தனை கட்டுப்பாடுகளோடு அங்கே நான் பணியாற்றினாலும் ஒரு பத்திரிகைத் தொடர்பாளனாக நான் நட்சத்திர அந்தஸ்தினைப் பெற முக்தா பிலிம்ஸ் நிருவனத்தில் நான் பணியாற்றியதுதான் பெரிதும் உதவியது என்பதை நான் சொல்லி ஆக வேண்டும்.

"தவப்புதல்வன்" வெளிவந்த ஆண்டிலேயே ஜெய்சங்கர் நடித்த "நவாப் நாற்காலி,உனக்கும் எனக்கும்,டில்லி டு மெட்ராஸ் " போன்ற பல  படங்களில் நான் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றினேன்.இந்த படங்களில் நான் பணியாற்ற பெரிதும் காரணமாக இருந்தவர் ஜெய்சங்கர். அப்போதே  எனக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பு உருவாகியிருந்தது.
இந்த கால கட்டத்தில்தான்  "சுபா நியூஸ்" சுந்தரம் என்னும்  புகைப்பட நிபுணரோடு  எனக்கு அறிமுகம் ஏற்பட்டது.இப்போது பல திரைப்படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றி வருகின்ற ஸ்டில்ஸ் ரவி சுபா சுந்திரத்தின் சீடர்தான். அவரது அலுவலகத்திலேதான் கே.எஸ்.நரசிம்மன் என்னும் நண்பரை நான் சந்தித்தேன். பின்னாளில் ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி அவர்களோடு இணைந்து நீயா படத்தைத் தயாரித்த அவர்  அப்போது ஏசி.திருலோகசந்தர் உட்பட பல பட நிறுவனங்களுக்கு  பத்திரிகைத் தொடரபாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் .

ஏறக்குறைய தினமும் மாலையில் ராயப்பேட்டையில் அமைந்திருந்த சுபா நியூஸ் சுந்தரத்தின் அலுவலகத்தில்  நான், நரசிம்மன் ,எம்.ஜி.வல்லபன் ஆகியோர் தவறாமல் சந்தித்துக் கொள்வோம்.பின்னர் பிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய எம்.ஜி.வல்லபன் அப்போது பேசும் படம் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த கால கட்டத்தில் எனக்கு நண்பராக இருந்தது மட்டுமின்றி பல வழிகளில் உதவிய இன்னொரு முக்கியமான நண்பர் பேசும்படம் அதிபர் ராமநாத் அவர்களின் ஒரே மகனான ரமணி. தினமும் காலை பதினோரு மணிக்கு நான் என்னுடைய ஸ்கூட்டரில் டிரைவ் இன் உட்லேண்ட் ஸ் ஓட்டலுக்கு சென்று விடுவேன்.அதற்குப் பிறகு மாலை வரை ரமணியின் காரில்தான் எனது ஸ்டுடியோ பயணங்கள் தொடரும்.மிகப் பெரிய செல்வந்தரின் மகனாக இருந்த போதிலும் அந்த அந்தஸ்தின் சாயலே இல்லாமல் எல்லோரிடமும் மிக எளிமையாக பழகுவது ரமணியின் தனிக்குணம்.பல நட்சத்திரங்களை  பேசும்படம் பத்தரிகைக்காக பேட்டி கண்டு எழுதுகின்ற வாய்ப்பையும் எனக்கும் எனது சகோதரர் ராமுவுக்கும் அளித்தார்  ரமணி.

பேசும்படம் ரமணி-கீதா திருமண வரவேற்பில் பேசும்படம்  டி..வி.ராம்நாத்,ஜெய்சங்கர் 



1973 ஆம் ஆண்டு நான் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில்
பாக்தாத் பேரழகி,சூர்யா காந்தி ஆகிய  இரு படங்களும் அண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கதாநாயகியாக நடித்த படங்கள்.
சூர்யகாந்தி படத்தின் நூறாவது நாள் விழாவிலே தந்தை பெரியார் அவர்களது கரங்களில் பரிசுக் கேடயம் பெறுகின்ற வாய்ப்பு ஜெயலலிதா அவர்களுக்குக் கிடைத்தது. எனக்குத் தெரிந்து தந்தை பெரியார் கலந்து கொண்ட ஒரே திரைப்பட நூறாவது நாள் விழா அது மட்டுமே என்று நினைக்கிறேன்
அந்த வருடம் வெளியான 'கங்கா கவுரி' படத்திலும்  ஜெயலலிதா அவர்கள்தான் நாயகியாக நடித்தார் . ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிரீமியர் ஸ்டுடியோவில் நடைபெற்ற போது அந்தப் படத்தைப் பற்றி பத்தரிகைகளில் எழுதுவதற்காக சுதேசமித்திரன் ராமமூர்த்தி, திரையுலகம் துரைராஜ், மதி ஒளி சண்முகம், நவசக்தி ராகவன்,தினமணி ஜாம்பவான்,பொம்மை சாமிநாதன்,பிலிமாலயா வல்லபன் ,தினத் தந்தி அதிவீர பாண்டியன்,பிலிம் நியூஸ் ஆனந்தன், மின்னல் மற்றும்  நான் உட்பட  சில பத்திரிகை யாளர்களை அழைத்திருந்தார் அந்தப் படத்தை இயக்கித் தயாரித்த பி.ஆர் பந்துலு. அவரது அழைப்பை ஏற்று நாங்கள் மைசூர் சென்றோம்

பகல் பதினோரு  மணியளவில் கங்கா கவுரி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பிரிமியர் ஸ்டுடியோவிற்கு சென்ற நாங்கள் படப்பிடிப்பில் ஜெமினி கணேசன் அவர்களையும் ஜெயலலிதா அவர்களையும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது வெறித்தனமாக  கூச்சல் போட்டுக் கொண்டு அந்த ஸ்டுடியோ வளாகத்தில் நுழைந்த  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண நேரத்தில் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஜெயலலிதா அவர்களை சூழ்ந்து கொண்டு விட்டார்கள்

ஒரு பத்திரிகைப் பேட்டியில் "நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவல்"என்று ஜெயலிதா கொடுத்திருந்த பேட்டியினால் ஆத்திரமடைந்திருந்த அவர்கள்            " நான் கன்னடத்தைச் சேர்ந்தவள்" என்று சொல்லும்படி அவரை தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தனர். உரக்க கூச்சல் போட்ட  அவர்கள் கையில் கத்தி உட்பட பல ஆயதங்கள் இருந்ததைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு முன்னாலே ஒரு அரண் போல நின்று கொண்டோம்.

நேரம் ஆக ஆக எந்த அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடக்க்கலாம் என்ற அந்த சூழ்நிலையில் கன்னட பட இயக்குனரான ரவி என்பவரும், ஜெமினி கணேசனும், இன்னும் சிலரும் "பிரச்னை மிகவும் பெரியதாகிவிடும் போலிருக்கிறது.அதனால் போனால் போகிறது ஒரு முறை அவர்கள் சொல்வது போல சொல்லி விடுங்களேன்" என்றார்கள்.

ஆனால் அதற்கு  ஜெயலலிதா என்ன  பதில் சொன்னார்?




Comments

Popular posts from this blog