மறக்க முடியுமா 5
வெள்ளித் திரையில் என் பெயர் முதன்
முதலாக இடம் பெற்ற படம்
-சித்ரா லட்சுமணன்
அப்போதெல்லாம் எல்லா
அலுவலகங்களிலும் முக்கியமானவர்கள் எல்லோருடைய
அறையிலும் ஒரு பாதி கதவு போட்டிருப்பார்கள். அது
மாதிரி ஒரு கதவு டைரக்டர்
ஜி.ராமகிருஷ்ணன் அலுவலகத்திலும் போடப்பட்டிருந்தது. அந்த பாதி கதவுக்குப் பின்னால் ரவிச்சந்திரனுடைய தலை
தெரிந்ததால்தான் திடீரென தனது பேச்சை நிறுத்தி விட்டார் ராமகிருஷ்ணன்.
தினத்தந்தி நிருபரிடம் சொல்லி அப்படி
ஒரு செய்தியை ரவிச்சந்திரன் வெளியிடச் சொன்னது உண்மைதான் என்ற போதிலும் நான் அதை
வெளிப்படையாக இயக்குனர் ராமகிருஷ்ணனிடம் கூறியதில் அவருக்கு என் மீது லேசான
வருத்தம் ஏற்பட்டது என்றாலும் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.
"சிநேகிதி" படத்தில் இரண்டாவது கதாநாயகனாக ரவிச்சந்திரன் நடிப்பதற்கு
அவர் கையாண்ட அந்த உத்தி ஒரு முக்கியமான
காரணமாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும் பத்திரிகைகளில் ரவிச்சந்திரன் நடிப்பதாக
செய்திகள் வெளிவந்துவிட்டதால் அவரை மாற்றவிரும்பாத ஜி.ராமகிருஷ்ணன் அவரை வைத்தே
படத்தைத் தொடர்ந்தார்
சிநேகிதி படப்பிடிப்பில் ரவிச்சந்திரனுடன் சித்ரா லட்சுமணன் |
அப்போது சுதா மூவீஸ் என்ற அந்த
நிறுவனத்திலே ராமசாமி அய்யர் என்பவர்
தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நிர்வாகத் திறன் மிக்க
அவருக்கு என் மீது அப்படி ஒரு அன்பு. அதனால் "சிநேகிதி" படத்தின்
வெளிப்புறப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது என்னையும் மறக்காமல்
அழைத்துச் சென்றார் அவர். நான் முதன் முதலாகக் கலந்து கொண்ட வெளிப்புறப் படப்பிடிப்பு அதுதான்.
ஜெமினி கணேசன்,சரோஜாதேவி,பாரதி
போன்ற நடிகர் நடிகைகள் மட்டுமின்றி பிரபல இசையமைப்பாளரான எஸ்.எம்.சுப்பையா நாயுடு
அவர்களோடும் எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட "சிநேகிதி" திரைப்படமே காரணமாக அமைந்தது.
சிநேகிதி படத்தில் ஜெமினி கணேசன்-பாரதி |
எம் ஜி ஆர் அவர்கள் மிகுந்த மரியாதை
வைத்திருந்தவரும், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் குருவுமான எஸ்.எம். சுப்பையா
நாயுடு அவர்கள்தான் "சிநேகிதி" படத்திற்கு இசையமைப் பாளர். மிக எளிமையான மனிதரான அவர்தான் . சிநேகிதி படத்தில் நடிகை பாரதியை முதன் முதலாக
சொந்தக் குரலில் பாட வைத்தார்.
டி.எம். சவுந்திரராஜனோடு இணைந்து
பாரதி பாடிய . "தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா"என்று
தொடங்கும் பாடல்தான் பாரதி சொந்தக்குரலில் பாடிய ஒரே பாடல் என்று நினைக்கிறேன்
என்னுடன் இருந்த நட்பு காரணமாக சொந்தக்
குரலில் பாரதி பாடிய அந்தச் செய்தியை ஏறக்குறைய எல்லா பத்திரிகைகளும் முக்கியத்துவம்
கொடுத்து புகைப்படத்துடன் .வெளியிட்டு இருந்தன.அதைப் பார்த்த பிரபல இயக்குனரான முக்தா சீனிவாசன் தனது
நண்பரான ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் "
உங்களது படத்துக்கு யார் பத்திரிகைத் தொடர்பாளர்?" என்று
விசாரித்திருக்கிறார். அந்த விசாரிப்பு என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு திருப்பம் ஏற்படக் காரணமாக அமைந்தது..அதைப்பற்றி
பின்னர் பார்ப்போம்.
சிநேகிதி திரைப்படம் எனக்குப்
பெற்றுத் தந்த இன்னொரு இனிய நண்பர் ஐசரிவேலன். அந்தப் படத்திலே நகைச்சுவை
வேடத்திலே நடித்த அவரும் நானும் மிகக் குறுகிய காலத்திலேயே வாடா போடா என்று
ஒருமையில் அழைத்துக் கொள்கின்ற அளவிற்கு நெருங்கிய நண்பர்களானோம் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 11 ஆம் தேதி அன்று சிநேகிதி படம் வெளியானது. அந்தப் படம்தான் எனது பெயரை வெள்ளித் திரையில்
முதல்முதலாக தாங்கி வந்த படம். பொது ஜனத் தொடர்பு –ஆர். லட்சுமணன் என்று அந்த
படத்தின் டைட்டிலில் என் பெயர் இடம் பெற்றிருந்தது. அந்தப் படம் வெளியாகி இன்று நாற்பத்தி ஏழு
வருடங்கள் ஆகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து
வைக்கவிருக்கும் நிலையில் சிநேகிதி
படத்திலே என் திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட இயக்குனர்
ஜி.ராமகிருஷ்ணன் அவர்களையும் அதற்கு துணை நின்ற கதாசிரியர் மா.ரா, தெள்ளூர் தருமராசன்
ஆகியோரோயும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அந்தப் படத்திற்குப் பிறகு பல
படங்களில் பத்திரிகைத் தொடர்பாளராக பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் என்னைத் தேடி
வரவில்லை என்றாலும் நாடக உலகில் பத்திரிகைத் தொடர்பாளராக நான் மிகவும் பிசியாக
பணியாற்றிக் கொண்டிருந்தேன்.அப்போது பால்குடம் என்ற நாடகத்தை ஏவி.எம்.ராஜன்
நடத்திக் கொண்டிருந்தார்.அந்த நாடகத்தில் ஏவி.எம்,ராஜன், புஷ்பலதா, டைப்பிஸ்ட் கோபு,
டி.எஸ்.சேஷாத்ரி ஆகியோர் நடித்தனர்.
தூயவன் எழுதிய அந்த நாடகத்தை இயக்கியவர்
டி .எஸ்.சேஷாத்ரி. அந்த நாடகத்தின் மூலம் நாடக ஆசிரியர் தூயவன், டி.எஸ்.சேஷாத்திரி
ஆகியோர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களானார்கள்
அப்போது 'ஒரு விரல்" என்ற
படத்தின் இயக்குனரான சி.எம்.வி.ரமணா "பசும்பொன்" என்ற பெயரிலே ஒரு
நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த
பிரேம் ஆனந்த், அவள் ஒரு தொடர்கதை படத்திலே அறிமுகமான ஜெய்கணேஷ், இன்று பல
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ராந்த் அவர்களின் மாமியாரான கனக
துர்கா,சரளா மற்றும் வலம்புரி நாகராஜன் ஆகியோர்
அந்த நாடகத்தில் நடித்தனர். இந்த நாடகங்கள்
எல்லாவற்றிற்கும் நான்தான் பத்திரிகைத் தொடர்பாளர்.அதற்கு எனக்கு ஊதியம்
எவ்வளவு தெரியுமா? ஒரு நாடகத்திற்கு பத்து ரூபாய்.அந்த பத்து ரூபாயைக் கூட
நாடகத்துக்குப் போனால்தான் கொடுப்பார் சேஷாத்ரி.
"பசும்பொன்" நாடகத்தில் கனகதுர்கா- சரளா |
இதற்கிடையில் இந்தியன் மூவி ஸ்டார்
பத்திரிகையின் பங்குதாரர் களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்
பத்திரிகை நின்றுவிட்டது. மிகக் குறுகிய காலமே அந்தப் பத்திரிகை வெளிவந்தது
என்றாலும் என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத பத்திரிகை அது. சரியாகச்
சொல்வதென்றால் ஒரு பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும் என்று அந்தப் பத்திரிகையில்
பணியாற்றியபோதுதான் நான் கற்றுக்
கொண்டேன்.
இந்தியன் மூவி ஸ்டார் பத்திரிக்கை நின்று போனதும் எனக்கு என்ன
செய்வது என்றே புரியவில்லை. பேசாமல் ஆரணியில் பார்த்து வந்த வேலையையே
தொடர்ந்திருக்கலாமோ என்று எண்ணம்
மேலோங்கிய சமயங்களில் எல்லாம்
திரையுலகத்திலும் பத்திரிக்கை உலகத்திலும் எனக்கு கிடைத்த அனுபவங்கள்
எனக்கு ஆறுதலாக அமைந்தன.
வேலை இழந்து நான் தடுமாறிய அந்தக் கட்டத்தில் மீண்டும் எனக்கு உதவ வந்த அன்பு நண்பர் எல்.ஜி ராஜ்
அவர்கள் சில பத்திரிகைகளின் பெயரைச் சொல்லி "அந்தப் பத்திரிகையில் சேர்ந்து
கொள்கிறீர்களா" என்று கேட்டார். எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் யோசித்து
சொல்கிறேன் என்று அவருக்குப் பதிலளித்தேன்.
விடிவெள்ளி,தமிழ்ச் செய்தி,தாயின்
மணிக்கொடி,மின்னல் கொடி,இந்தியன் மூவி ஸ்டார் என்று ஆறு மாதத்திற்கு ஒரு முறை
வெவ்வேறு பத்திரிகைகளின் பெயரில் அறிமுகமாகி திரை நட்சத்திரங்களை சந்தித்து பேட்டி
கண்டது குறித்து நினைத்துப் பார்க்கப் பார்க்க எனக்கே சங்கடமாக இருந்தது.
அதற்காக லாபம் என்றாலும் நட்டம்
என்றாலும் எனக்காக நீங்கள் பத்திரிக்கை நடத்தித்தான் ஆக வேண்டும் என்று யாரிடம் சொல்ல முடியும்? இந்த காரணங்களால் நாமே சொந்தமாக ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தால்
என்ன என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அந்த சமயத்தில் அரசாங்கப் பணியிலே இருந்த எனது சகோதரர் ராமுவும் அரசு வேலையை ராஜினாமா
செய்துவிட்டு என்னோடு பத்திரிகைப் பணிகளில் இணைந்தார்
திரைக்கதிர் என்ற பெயரில் ஒரு
சினிமா பத்திரிகையை ஆரம்பிக்க திட்டமிட்ட நான் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
ஆதரவு பத்திரிகையாக அதை வெளிக்கொண்டு வர முடிவு செய்தேன். நான் இயல்பாகவே சிவாஜி
ரசிகனாக இருந்தது அதற்கு முக்கியமான காரணம். அந்த பத்திரிகையில் மற்ற நடிகர் நடிகைகளைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றாலும்
அதிக அளவில் சிவாஜி செய்திகளே அந்த இதழில்
இடம் பெறுகின்ற அளவில் அப் பத்திரிகையை வடிவமைத்தேன்.
திரைக்கதிர் பத்திரிகையின் முகப்பு |
சிவாஜி டைரி என்ற பெயரில் சிவாஜி
கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள்,சிவாஜி
அவர்களின் படப்பிடிப்புகள் பற்றிய புகைப்படத் தொகுப்புகள் ரசிகர்களின் கேள்விகளுக்கு சிவாஜி பதில்
சொல்கின்ற பகுதி ஆகியவை அந்தப் பத்திரிகையில் ஓவ்வொரு மாதமும் இடம் பெற வேண்டும்
என்று நானும் என் சகோதரர் ராமுவும் நிச்சயித்துக் கொண்டோம்
பத்திரிகையின் ஆசிரியராக சித்ரா
லட்சுமணன் ஆகிய நானும் இணையாசிரியராக எனது சகோதரர் ராமுவும் பொறுப்பேற்றுக் கொண்ட
திரைக்கதிரின் முதல் இதழ் 1971 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது
அதுவரை ஆர்.லட்சுமணனாக இருந்த நான்
அப்போதுதான் சித்ரா லட்சுமணன் ஆனேன்.
எதனால் அந்த பெயர் மாற்றம்? யார்
அந்த சித்ரா என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்
-தொடரும்
Comments
Post a Comment