மறக்க முடியுமா? 3

நடிகையை பேட்டி காண மறுத்த ஜெயகாந்தன்

-சித்ரா லட்சுமணன்

ஆரணிக்குத் திரும்பிச் சென்ற பிறகு மீண்டும் நூல் நிலையத்தில் சில நாட்களை செலவிட்ட பிறகு அங்கே அமைந்திருந்த லஷ்மி சரஸ்வதி மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும்போது சென்னையில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது  என்றும். அப்படியிருக்கும்போது நான் ஆரணியில் இருப்பது சரியல்ல என்றும் ஏறக்குறைய தினமும் எனக்கு கடிதம் எழுதி சென்னைக்கு வந்துவிடும்படி அழைத்துக் கொண்டிருந்தார் விடிவெள்ளி பத்திரிகையிலே எனக்கு அறிமுகமான ஓவியரான எல்.ஜி.ராஜ். என் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை  விட அதிகமான நம்பிக்கை அவருக்கிருந்தது.
எந்த வேலையும் இல்லாமல் சென்னைக்குச் சென்று என்ன செய்வது என்ன எண்ணத்தில் நான் இருந்ததால் அவர் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியும் நான் ஆரணியை விட்டு கிளம்பவில்லை

என் பிரச்னை என்ன என்பதை புரிந்து கொண்டவர் போல அடுத்து எனக்கு எழுதிய கடிதத்தில் எனக்காக சென்னையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு பற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார் ராஜ். 

சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் அவரது நண்பர்கள் சிங்கப்பூரில் இருந்து  வெளிவருகின்ற இந்தியன் மூவி நியூஸ் பத்திரிகையைப் போல சென்னையில் ஒரு சினிமா பத்திரிக்கை ஆரம்பிக்கவிருப்பதாகவும் நான் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தவுடன் என்னால் ஆரணியில் இருக்க முடியவில்லை. அடுத்த நாளே வேலையை விட்டு நின்று கொள்வதாக லஷ்மி சரஸ்வதி மில்லின் மேலாளரைப் பார்த்து சொல்லி விட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன்.

சென்னைக்கு வந்தவுடன்  என்னை அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார் எல் ஜி ராஜ். .கலைஞர் கருணாநிதி அவர்களின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் லாயிட்ஸ் ரோட்டில்  அந்த அலுவலகம் அமைந்திருந்தது.. அப்போது சபாநாயகராக இருந்த கே ஏ மதியழகந அந்த அலுவலகம் அமைந்திருந்த வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்தார்.

அந்த அலுவலகத்தையும் அந்த அலுவலகத்தில் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் நானூறு சதுர அடி அறையையும் பார்த்து அப்படியே அசந்து போனேன் நான்.

அடுத்து பத்திரிகையை ஆரம்பிப்பதற்கான வேளைகளில் சுறுசுறுப்பாக இறங்கினோம். பத்திரிகையின் பெயரை இந்தியன் மூவி ஸ்டார் என்று வைப்பது என்று முடிவானது. அப்போது சந்தமாமா பப்ளிகேஷனில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பொம்மை என்ற சினிமா பத்திரிகையை விட சற்று பெரிய அளவில் முழுக்க முழுக்க ஆப்செட்டில் பத்தரிகையை கொண்டு வர திட்டமிட்டோம்

அதுவரை பத்திரிகை உலகில் எனது அனுபவம் என்றால் விடிவெள்ளி பத்தரிகையில் பணியாற்றியதும் அந்த பத்திரிகை நின்றதும் தாயின் மணிக்கொடி என்ற பெயரில் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு  வண்ணாரப் பேட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த தினசரி ஒன்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றியதும்தான்.

ஆப்செட் முறையில் பத்திரிகையை அச்சிடுகின்ற தொழில் நுணுக்கம் பற்றி இந்தியன் மூவி ஸ்டார் பத்திரிகை ஆரம்பிக்கப் படுகின்றவரை எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகி தமிழ் நாட்டிலும் சிங்கப்பூரிலும் விற்பனையான  அந்த  பத்திரிகைக்கு ஆசிரியராக நான் பணியாற்றினேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் ஓவியரான எல் ஜி ராஜ் அவர்கள்தான்,  
  
இந்தியன் மூவி ஸ்டார் இதழில் முதல் அட்டையை அலங்கரித்தவர் கே. ஆர்.விஜயா. அப்போது பேசும் படம் ,பொம்மை, கலை,என்று மிகக் குறைந்த அளவிலேயே சினிமா பத்தரிகைகள் வெளி  வந்து கொண்டிருந்ததால் எம்,ஜி,ஆர், சிவாஜிகணேசன்,,ஜெமினி கணேசன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,ஏவி எம் ராஜன் முத்துராமன், ஜெயலலிதா,கே ஆர்,விஜயா, சவுகார் ஜானகி என்று எல்லா பிரபல நடிகர் நடிகைகளிடையேயும் மிகச் சிறந்த வரவேற்பை அந்த பத்திரிக்கை பெற்றது.அந்தப் பத்திரிகைக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரை நட்சத்திரங்களோடு நெருக்கமாகப பழகக் கூடிய வாய்ப்ப்பு எனக்குக் கிடைத்தது. நட்சத்திரங்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களான தினமணி ஜாம்பவான்,தினத்தந்தி அதி வீர பாண்டியன், நவமணி ஜோசப், பேசும்படம் பத்திரிகையின் உரிமையாளர் டிவி ராம்நாத் அவர்களின் மகனான ரமணி, அந்த பத்திரிகையிலே ஆசிரியராகப் பணியாற்றிய சம்பத் குமார், எம்.ஜி..வல்லபன்(முதலில் பேசும்படம் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப பணியாற்றிய இவர்தான் பின்னர் பிலிமாலயா பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்) புகைப்படக்காரர் ஜேவி, பொம்மை பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய சாரதி, மதி ஒளி சண்முகம், எம் பி மணி ஆகியோருடனும் எனக்கு நல்ல நட்பு உருவாக அந்தப் பத்திரிக்கை காரணமாக அமைந்தது

என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பெரிய பொறுப்பை அந்த பத்திரிக்கையை நடத்தியவர்கள் ஒப்படைத்திருந்ததால் அதை சரியாகவும் திறமையாகவும்  கையாள வேண்டும் என்ற எண்ணத்தில் அதுவரை சினிமா இதழ்களில் வெளிவராத பல புதிய பகுதிகளை அந்த பத்திரிகையில் அறிமுகம் செய்தேன். அவற்றில் ஒன்று பிறந்த நாள் என்ற பகுதி. பிரபலமாக உள்ள கதாநாயகர்கள்,கதாநாயகிகள் பிறந்த நாளன்று காலை கண் விழிப்பது முதல் இரவு படுக்கைக்குப் போகின்ற வரை என்னென்னே செய்கிறார்கள் எனபதை புகைப்படங்களுடன் தொகுத்துத் தந்த  அந்த பகுதி வாசகர்களிடையே  நல்ல வரவேற்பினைப் பெற்றது. முதலாவதாக வந்த பிறந்த நாள் பகுதியில் வெள்ளிவிழா நாயகனான ரவிச்சந்திரன் பங்கு பெற்றார்

அடுத்து நாவலாசிரியர் கண்ட நட்சத்திரம் என்ற பகுதியை அறிமுகப்படுத்தினேன். பிரபல நாவலாசிரியர்கள் திரை நட்சத்திரங்களை சந்தித்து உரையாடுகின்ற அந்த பகுதிக்காக மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை பேட்டி காண வாகினி ஸ்டுடியோவிற்கு வந்தார்  பிரபல நாவலாசிரியரான நா.பார்த்தசாரதி.

அதைத் தொடர்ந்து வந்த அடுத்த இதழில் நாவாலாசிரியர் ஜெயகாந்தன் இடம் பெற்றால் நன்றாக இருக்குமென்று எண்ணிய நான் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அந்தப் பகுதியைப் பற்றி விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் "எந்த நடிகரை  நான் பேட்டி காண வேண்டும்?"என்று கேட்டார் '

"நடிகரை இல்லை சார் நடிகையை"என்று அவருக்குப் பதில் கூறிய நான் "நடிகை பாரதியைத்தான் அவர் பேட்டி காண வேண்டும்"என்று அவரிடம் சொன்னேன். "சரி" என்று தந்து சம்மதத்தைத் தந்தார் அவர்.
அடுத்து நடிகை பாரதியிடம் பேசி அவரது நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். சந்திப்பை அப்போது மைலாப்பூர் சி ஐ டி .காலனியில் அமைந்திருந்த பாரதியின் விட்டிலேயே வைத்துக் கொள்வது என்று முடிவாகியது

சந்திப்பு நடைபெறவிருந்த நாளன்று பேட்டிக்கு  ஜெயகாந்தனை பாரதி வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன்.அப்போது ஜெயகாந்தன் சேத்துப்பட்டில் தங்கியிருந்தார் என்று நினைக்கிறேன்.

பேட்டிக்கு கிளம்பலாமா என்று நான் கேட்டவுடன் அந்தப் பகுதியைப் பற்றி இன்னொருமுறை கேட்டுத் தெரிந்து கொண்ட ஜெயகாந்தன் "நான் எதற்கு அந்த நடிகையைச் சந்திதிக்க வேண்டும்?"என்று என்னைப் பார்த்து கேட்டார்

அந்த பேட்டி கோளாறில்தான் முடியப் போகிறது என்று அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது.


-தொடரும் 

Comments

Popular posts from this blog