மறக்க முடியுமா? 1

-சித்ரா லட்சுமணன்


எல்லா நதிகளையும்  போல மனிதனின் வாழ்க்கையும் ஒரு புள்ளியில்தான் தொடங்குகிறது. அந்தப் புள்ளி  எப்படி மாறினாலும் மறக்க முடியாத பல அனுபவங்களை அது விதைத்துவிட்டுப் போகிறது என்பது மட்டும் உண்மை.   

ஆரணி என்ற  ஊரில் ஒரு பம்புசெட் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு பத்திரிகையாளனாகவும், திரைப்படத் தயாரிப்பாளனாகவும், இயக்குனராகவும்,நடிகனாகவும் உருவெடுப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை.ஆனாலும் இவைகள் எல்லாம் என் வாழ்வில் நடைபெற்றன. இந்த  மாற்றங்களைப் பெற்ற போது நான் சந்தித்த மனிதர்கள், எனக்குக் கிடைத்த  அனுபவங்கள்,அவமானங்கள் எல்லாமே  மறக்க முடியாதவை. அந்த அனுபவங்களைத்தான் வாரம் தோறும் தினமலர் வாசகர்களாகிய உங்களோடு மறக்க முடியுமா என்ற தலைப்பில்  பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்

சினிமாவோடு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு குடும்பம் என்னுடைய குடும்பம். என்னுடைய தந்தை ராமசாமி ஒரு பள்ளி ஆசிரியர். என் தாயார் சீதாலட்சுமி  படிப்பு வாசனை இல்லாத குடும்பத் தலைவி. மூத்த சகோதரரான கிருஷ்ணமூர்த்தி  காவல் துறையில் பணியாற்றியவர்.
எங்கள் குடும்பத்தில் எனக்கு முன்னால் சினிமா மீது பைத்தியமாக இருந்த ஒருவர் உண்டென்றால் அவர் எனது இரண்டாவது சகோதரரான நடராசன். பத்திரிக்கை விளம்பரங்களில் வரும் புகைப்படங்களையும் தியேட்டர்களில் கிடைக்கும் பிலிம் துண்டுகளையும் வைத்துக் கொண்டு சினிமா காட்ட முயன்ற இவர் நான் எட்டு அல்லது ஒன்பது வயது சிறுவனாக இருந்த போது  வீட்டிலே சினிமா காட்டுகின்ற முயற்சியில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்  
எனது தந்தை ராமசாமியும் தாய் சீதாலட்சுமியும் 
மூன்றாவது  சகோதரரான ராமமூர்த்தி ஒரு பள்ளியிலே ஆசிரியராக வேலை பார்த்தவர்.. லட்சுமணனான நான்  ஓர் கால கட்டத்திலே சித்ரா லட்சுமணனாக ஆன பிறகு  சித்ரா ராமுவாக இவர்  திரையுலகில்
அடி எடுத்து வைத்தார்.அதைப் பற்றி பின்னால் பார்ப்போம்.
சினிமாதான் எனது வாழ்க்கையாக அமையப் போகிறது என்று எனது பள்ளிப் பருவத்தின்போது எனக்குத் தெரியாது என்றாலும் சின்ன வயதில் சளைக்காமல் சினிமா பார்த்தவன்  நான். .எனது மூத்த சகோதரர் காவல் துறையில் பணியாற்றியதால் நாங்கள் குடியிருந்த ஆற்காட்டில் எந்தத் தியேட்டரிலும் என்னிடம் டிக்கெட் கேட்க மாட்டார்கள்.  ஆரம்பப் பள்ளியில் படித்த அந்த கால கட்டத்தில் எம் ஜி ஆர் நடித்த குலேபகாவலி படத்தையும் அலிபாபா நாற்பது திருடர்கள் படத்தையும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது
குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆர்.-டி.ஆர்.ராஜகுமாரி

நான் பள்ளி இறுதி வகுப்பைப் படித்தது வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா உயர் நிலைப் பள்ளியில். வேலூரில் படிக்கும்போது  ஒரு முழு சினிமா பைத்தியமாகவே நான்  மாறி இருந்தேன். வேலூரில் உள்ள தாஜ் திரை அரங்கிலும் ராஜா திரை அரங்கிலும் தீபாவளி அன்று காலையில் ஏழு மணிக்கே படத்தைத் ஆரம்பித்து விடுவார்கள். எனது தந்தையை ஏமாற்றிவிட்டு சினிமா பார்க்க அது எனக்கு ரொம்பவும் வசதியாக இருந்தது. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதாக என் அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு நேராக தியேட்டருக்கு சென்றுவிடுவேன். படம் பார்த்துவிட்டு பதினோரு மணிக்கு  வீட்டுக்கு திரும்பி சாப்பிட்டு விட்டு மீண்டும் கிளம்பி அடுத்த படம். இப்படி தீபாவளியன்று மூன்று படமாவது பார்க்காமல் இருக்கமாட்டேன்

நான் பள்ளிப் படிப்பை முடித்தபோது என்னுடைய சகோதரன், சகோதரி  ஆகிய இருவருக்கும்  ஆரணியில் வேலை கிடைத்ததால் எங்கள் குடும்பம் ஆரணிக்கு குடி பெயர்ந்தது. அங்கே பம்பு செட்டுகள் விற்கும் கடையொன்றில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே வேலை செய்யும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் ஆரணியில் இருந்த நூலகத்தில்தான் என்னைப் பார்க்க முடியும். நாவல்கள்,வரலாற்றுப் புத்தகங்கள்,கட்டுரைகள் என்று எல்லா புத்தகங்களையும் எந்த இலக்கும்  இல்லாமல் அங்கே படித்தேன்.

இந்த சமயத்தில்தான் "கல்யாண மண்டபம்" என்ற திரைப் படத்தில் தெள்ளூர் மு.தருமராசன் என்பவர் பாட்டு எழுதியிருக்கின்ற விஷயம் எனக்குத் தெரிந்தது.அந்த தெள்ளூர் தருமராசன்தான் நான் வேலை செய்து கொண்டிருந்த பாம்பு செட் கடையின் உரிமையாளர். அவரை அதற்கு முன்னாலேயே பல முறை பார்த்திருக்கிறேன் என்றாலும் அவர் சினிமாவிற்கு  பாட்டு எழுதி இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை நான் பார்த்த பார்வையில் எக்கச்சக்கமான மரியாதை கலந்திருந்தது 
அவர் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தார் எனபதை மெள்ள அவரிடமும் பம்பு செட் கடைக்கு அடிக்கடி வந்த  அவரது சகோதர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 
தெள்ளூர் மு.தருமராசன் 

மா.ராமச்சந்திரன் என்ற கதாசிரியர்  தெள்ளூர் தருமராசனின் மிக நெருங்கிய நண்பர். மா.ரா என்ற பெயரில் எம் ஜி ஆர் நடித்த விவசாயி,  சிவாஜி கணேசன் நடித்த  பலே பாண்டியா ரவிச்சந்திரன் நடித்த எங்க பாப்பா ஆகிய படங்களுக்கு பின்னாளில் கதை வசனம் எழுதிய  இவர் நாகேஷ், பாலாஜி ஆகியோரின் மிக நெருங்கிய நண்பர். திரைப்படங்களில் நடிக்க  வருவதற்கு முன் நாகேஷ் இவரது நாடகங்களில் நடித்துத்தான் புகழ் பெற்றார். தெள்ளூர் தருமராசன் முதல் முதலாகப் பாடல் எழுதிய கல்யாண மண்டபம் படத்தைத் தயாரித்தவர் இந்த மா.ரா,தான்.
இந்த விவரங்களை எல்லாம் நான் அறிந்து கொண்ட போது சினிமா உலகின் கதவுகளை எனக்குத் திறந்து விடப் போகிறவர் அந்த தெள்ளூர் தருமராசன் என்ற அற்புதமான மனிதர்தான் என்று  எனக்குத்தெரியாது
அவர் எனக்கு அறிமுகமான அதே கால கட்டத்தில்தான் ஜெய்சங்கர் நடித்த இரவும் பகலும் படம் வெளியானது. இப்போது உள்ளது போல அப்போது தமிழ்ப் படங்கள் முன்னூறு தியேட்டர்களிலும் நானூறு தியேட்டர்களிலும் வெளியாவது வழக்கமில்லை அதனால் ஆரணியில் இரவும பகலும் படம் வெளியாகவில்லை வேலூர் நேஷனல் தியேட்டரில்தான் அந்தப் படம் வெளியாகி இருந்தது. எனக்கோ அந்தப் படத்தை வெளியான அன்றே பார்க்க வேண்டும் என்று ஆசை
ஏழரை  மணிக்கு ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு வேலூருக்கு புறப்பட்டேன். சரியாக ஒன்றரை  மணி நேரத்தில் நேஷனல் தியேட்டருக்குப் போய் படம் பார்த்துவிட்டு அன்று இரவே ஆரணி திரும்பி விட்டேன். முதல் படத்திலேயே ஜெய்சங்கரை எனக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. நிச்சயமாக சினிமாவில் அவர் ஒரு பெரிய ஆளாக வருவார் என்று எனக்குத் தோன்றியது  

அந்த ஜெய்சங்கர் படுத்திருக்க அவரது தொடையில் கை வைத்து அவர் மீது சாய்ந்து கொள்கின்ற  அளவிற்கு நான் அவருடைய நெருக்கமான நண்பன் ஆவேன் என்று அப்போது  கனவிலும் எதிர்பார்க்கவில்லை..
-தொடரும்

  





Comments

Popular posts from this blog